கலைஞர் மு.கருணாநிதி


என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே !!

இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவரிடம் தாமதமாக வந்தடைந்த பல்லாயிர இளைஞர்களில் நானும் ஒருவன்.

ஒரு தலைவரைப் பெயர் கொண்டு குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் கலைஞரை கருணாநிதி என்றும் செல்வி.ஜெயலலிதாவை அம்மா என்று சொல்வதில் உள்ளது ஒரு பார்ப்பனிய அரசியல்.

கலைஞர் என்ற சொல் சிலருக்கு அமுதம் சிலருக்கு விஷம். அவர் மீது தான் எத்தனை வன்மம் இச்சமூகத்துக்கு. நான் அறிந்தவரைத் தமிழகத்தில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டவர் (அரசியல் தளத்தில்) கலைஞர்.

அதுவும் எச்சமூகத்தின் விடுதலை, முன்னேற்றத்துக்குத் திராவிட இயக்கம் பாடுபட்டதோ அவர்களிடம் இருந்து தான் மிகக் கடுமையான (அருவருப்பான) வன்சொற்களை எதிர் கொண்டார். அவர் இறந்த பின் இன்றும் அது தொடர்கின்றது.

அவர் இறக்கும் சில மாதங்கள் முன்பு வரை அவரை எதிர்த்து/மிகக் கடுமையாக வசைச்சொற்களால் விமர்சிக்கும் இன்றைய நுனிப் புல் இளைஞர்களில் நானும் ஒருவன். நான் அவரைப் புரிந்து, வாசிப்பின் வாயிலாக நெருங்கத் தொடங்கிப் போது அவர் இறந்து விட்டார்.
இது எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட தோல்வி மட்டும் அல்ல தி.மு. கழகத்தின் தோல்வியும் தான்.

தி.மு.கழகம் என்றுமே தனது வரலாற்றினை, சாதனையை, மக்கள் பணியினை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல முனைப்புக்காட்டியதில்லை (அய்யா சு.ப.வி தவிர). அதன் விளைவாகவே இங்கு சீமானிய பேச்சுக்கள் எடுபடுகின்றன.

பிரபாகரன் தீவிரவாதி என்று கூறிய அம்மையார் இவர்களுக்கு ஈழத் தாய். ஈழத்திற்காக MLA பதவியை ராஜினாமா செய்தவர் /விடுதலைப் புலிகளால் ஆட்சிய இழந்தவர் தமிழினத் துரோகி. இக் கூட்டத்திற்கு ஈழமும் தெரியாது சர்க்காரியா கமிஷனும் தெரியாது. 

இந்தியாவிலேயே ஊழலுக்காக முதல்வர் பதவி இழந்த இவர்களின் புரட்சித் தலைவியால் கலைஞருக்கு எதிராக ஒரு ஊழல் ஆதாரத்தைக் கூடவா நிரூபிக்க முடியவில்லை.

ஹிந்து விரோதி என்று அவரைக் காலம் முழுவதும் சித்தரித்த பார்ப்பனப் பத்திரிகை உலகம் அவரைப் பற்றி நடுநிலையாகவாச் செய்திகள் வெளியிடும். முரசொலி என்று ஒன்று இல்லை என்றால் திராவிடத் தீ என்றே பத்திரிகை வடிவில் அழிந்திருக்கும்.

மண்டல் கமிஷன்  மூலம் இட ஒதுக்கீடு வரக் காரணமாக இருந்தவர்.
மாநில முதல் அமைச்சர்களுக்குக் கொடி ஏற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்.
காஷ்மீர் மக்களின் சுயாட்சியைக் காத்தவர்.

ஒரு தலைவனின் பெருமையே அவன் மறைவிற்குப் பின் எவ்வாறு அவ்வியக்கம் தன்னை முன்னிறுத்திச் செல்கிறது என்பதில் தான் உள்ளது. இன்று தி.மு.கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நிற்பதைப் பார்க்கும்போது தி.மு.கழகத்தின் குரல் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி உரக்க ஒழிக்கும்.

பெரியாரிடம் அரசியல் பயின்ற அண்ணா, கலைஞர் என்றுமே தனித்துவ மிக்கத் தலைவர்கள் தான்.

இனம், மொழி, மாநில சுயாட்சி காத்த ஓர் இயக்கத்தின் கடைநிலை தொண்டன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் !!

ஆட்சியிலிருந்தால் அண்ணா வழி ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி - கலைஞர்

Comments

Unknown said…
மானமிகு சுய மரியாதை காரர்!!! பேரருராளர்!!! தமிழினத் தலைவர்!!!கலைஞர்!!!